தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநாடு நேற்று மதுரையில் விமர்சையாக நடைபெற்றது. அரசியல்வாதியாக உரையாற்றும் விஜய்யின் பேச்சு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவரது உரையில் தீவிர அரசியல் தொனியும் உணர்ச்சி பூர்வமான கருத்துகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் மாநாட்டுடன் சேர்த்து இன்னொரு விஷயமும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டது. அது, சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தின் விளம்பரங்கள் மாநாடு நேரத்தில் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

முன்னதாக அக்டோபரில் நடந்த முதல் மாநாட்டிலும் இதேபோல் நடந்தது. அப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் படத்தின் விளம்பரங்கள் விஜய்யின் மாநாடு நேரத்தில் ஒளிபரப்பப்பட்டன. அந்த படம் பின் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போது இரண்டாவது மாநாட்டின் போது மதராஸி பட விளம்பரம் இடம்பெற்றதால், “அமரன் வெற்றியைப் போலவே மதராஸியும் பிளாக்பஸ்டர் ஆகுமா?” என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் டீகோட் செய்து பேசுகின்றனர்.
மேலும், விஜய்யின் GOAT படத்தில் சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கி கொடுக்கப்பட்ட காட்சி முதல், இருவருக்கும் இடையே ஒரு அடையாள இணைப்பு உருவாகி விட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். அதுபோலவே மாநாட்டின்போது அவரது பட விளம்பரங்கள் வருவது ஒரு சின்னம் என சிலர் விவாதிக்கின்றனர். “தமிழ் சினிமாவின் அடுத்த தளபதி சிவகார்த்திகேயனே” என்று சிலர் வலியுறுத்த, மற்றவர்கள் விஜய்யின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று வாதிடுகின்றனர்.
எதுவாயினும், சிவகார்த்திகேயன் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது. பிரமாண்டமான ப்ரோமோஷன்களில் ஈடுபட்டுள்ள இப்படம், சிவகார்த்திகேயனுக்கு மேலும் ஒரு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து முதல் முறையாக முருகதாஸுடன் இணைந்திருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.