சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படத்தின் வெற்றி குறித்து ரசிகர்கள் மற்றும் திரைத்துறை இருவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன், கடந்த பத்து ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் பல படங்கள் வெற்றியை பெற்றுள்ளன. சில படங்கள் எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என்றாலும், அமரன் படத்தின் மிகப்பெரிய வெற்றி அவரை டயர் 1 நடிகர்களின் வரிசைக்கு கொண்டு சென்றது. ரூ.350 கோடிக்கும் மேல் வசூல் செய்த அந்த வெற்றியைத் தொடர்ந்து மதராஸி படம் வெளிவருகிறது.
இந்த நிலையில், மதராஸி படமும் குறைந்தது ரூ.300 கோடிகளை வசூலிக்க வேண்டும் என்ற அழுத்தம் அவர்மீது இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், தெலுங்கில் காதி தவிர பெரிய படங்கள் வெளியாகாததால், தமிழில் மதராஸிக்கு நல்ல வசூல் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு படம் ரசிகர்களை ஈர்க்க வேண்டும் என்பது அவசியம்.
முருகதாஸின் முந்தைய இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால், இவரின் கம்-பேக் படமாக மதராஸி கருதப்படுகிறது. அதேசமயம், அமரன் பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் சம்பளமும் உயர்ந்துள்ளது. அதை தக்க வைத்துக் கொள்ள இந்த படம் வெற்றி பெற வேண்டும்.
தற்போது படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. 16 வயதுக்கு மேற்பட்டோர் பார்வைக்கு ஏற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வசூலில் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் இந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.