சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மாணவர்களிடம் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சினிமா என்னை விட்டு விலகினாலும், கல்வியே எனக்கு துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் வாழ்ந்து வருகிறேன் என்று அவர் உருக்கமாக பேசியது அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அரசுத் திட்டங்களின் பயன்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்ட இந்த விழாவில், கல்வியே வாழ்க்கையை முன்னேற்றும் முக்கிய கருவி என்று சிவகார்த்திகேயன் வலியுறுத்தினார்.
“ஒரு குடும்பத்தில் ஒருவர் படித்தால் அடுத்த தலைமுறை முன்னேறும்” என்ற கருத்தை தனது வாழ்க்கையுடன் இணைத்து கூறிய அவர், தனது தந்தை பெற்ற கல்வியையும், தானும் தனது அக்காவும் பெற்ற உயர்கல்வியையும் எடுத்துக்காட்டாக பகிர்ந்தார். “சினிமா துறை சவால்கள் நிறைந்தது. ஆனால், என்னிடம் இரண்டு டிகிரி இருக்கிறது என்பதே எனக்கு தைரியம் அளிக்கிறது. எந்த நேரத்திலும் கல்வி என்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களிடம் உரையாற்றிய அவர், “மார்க்கிற்காக கொஞ்சம் படியுங்கள்.. ஆனால் வாழ்க்கைக்காக நிறைய படியுங்கள். நல்ல வீடு கட்ட வேண்டும், பெற்றோரை பார்த்துக்கொள்ள வேண்டும், மதிப்புடன் வாழ வேண்டும் என்றால் கல்வி தவிர்க்க முடியாத ஒன்று. அதை மட்டும் செய்யுங்கள்” என்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.