கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். டிசம்பர் 24 அன்று புளோரிடாவில் உள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிரபல புற்றுநோய் மருத்துவர் முருகேஷ் மனோகர் அவருக்கு சிகிச்சை அளித்தார்.

ஒரு மாத இடைவேளைக்கு பிறகு சிவ ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூரு திரும்பினார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். அவரை கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், “புற்றுநோய் பற்றி கேள்விப்பட்டவுடன் முதலில் பயந்தேன். எனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவு எனக்கு பலத்தை அளித்தது. மீண்டும் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன்” என்றார்.