திருவனந்தபுரம்: மலையாளம், தமிழ் படங்களில் நடித்த நடிகை நஸ்ரியா, தெலுங்கில் நானி நடித்த ‘அண்டே சுந்தராணிகி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் 2022-ல் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு 2 வருடங்களாக நஸ்ரியாவின் படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லை.
அவரது கம்பேக்குக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், பாசில் ஜோசப்புடன் ஒரு புதிய மலையாள படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கு ‘சூக்ஷ்மதர்ஷினி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. எம்.சி.ஜித் இயக்கியுள்ள இப்படத்தை சமீர் தாஹிர் மற்றும் ஷைஜு காலித் இணைந்து தயாரித்துள்ளனர்.
கிறிஸ்டோ சேவியர் படத்திற்கு இசையமைக்கிறார். தீபக் பரம்போல், சித்தார்த் பரதன், மெரின் பிலிப், அகிலா பார்கவன், பூஜா மோகன்ராஜ், கோட்டயம் ரமேஷ், கோபன் மங்காட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் நவம்பர் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நஸ்ரியாவை பொறுத்தவரை 2020-ம் ஆண்டு வெளியான ‘டிரான்ஸ்’ என்ற மலையாளப் படத்தில் நடித்தார். அதன் பிறகு 4 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடித்த மலையாளப் படம் வெளியாகிறது.