இயக்கம் மற்றும் நடிப்பில் தீவிரமாக செயல்பட்டு வரும் சுந்தர் சி, கடந்த ஆண்டு வெளியான “அரண்மனை 4” மற்றும் இவ்வாண்டு தொடக்கத்தில் திரைக்கு வந்த “மத கஜ ராஜா” ஆகிய இரண்டு படங்களும் வெற்றிபெற்றதுக்குப் பிறகு, “கலகலப்பு 3” படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதனை இடைநிறுத்தி, தற்போது வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள “கேங்கர்ஸ்” படத்தை முதலில் முடித்துள்ளார்.

இந்த படத்தில் ரெஜினா, முனீஸ்காந்த், மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் சத்யா இசையை அமைத்துள்ளார். இது சுந்தர் சி மற்றும் வடிவேலு கூட்டணி 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ஏப்ரல் 24ஆம் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக வடிவேலுவின் பழைய நகைச்சுவை சாயலில் அவர் மீண்டும் களமிறங்கியிருக்கிறார் என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இப்படத்தின் ஓடிடி உரிமைகள் பெரிய தொகைக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர் சி, “தமிழ் சினிமாவில் மூன்று வகையான இயக்குநர்கள் உள்ளனர். ஒருவர் தங்களுக்குப் பிடித்ததை எடுப்பவர்கள், மற்றொருவர் மக்களுக்கு பிடித்ததை எடுப்பவர்கள், இன்னொருவர் ஹீரோக்களுக்கு பிடித்ததை எடுப்பவர்கள். இதில் நானே மக்களுக்கு பிடித்ததை எடுப்பவன்” என தெரிவித்தார்.