சென்னை: தக் லைப் படத்தில் உதவி இயக்குனராக சுந்தர்.சி – குஷ்பூ தம்பதியின் மகள் அனந்திதா பணியாற்றி உள்ளாராம்.
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சுந்தர்.சி – குஷ்பு தம்பதியின் மகள், அனந்திதா சுந்தர், தமிழ் திரையுலகின் ஜாம்பவான் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த ‘தக் லைப்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார் என்ற செய்தி தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரையரங்குகளில் வெளியான இப்படத்தில், தனது மகளின் பெயரை மணிரத்னம் குறிப்பிட்டதற்கு குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில் ‘தக் லைப்’ திரைப்படத்தின் இறுதியில், தனது மகள் அனந்திதா உதவி இயக்குநராகப் பெயர் சேர்க்கப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஒரு பெற்றோராக, எனது மகளின் பெயர் மணிரத்னம் திரைப்படத்தில் அவரது உதவியாளராக இடம்பெற்றிருப்பதைப் பார்ப்பது மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது. அவளுக்கு கணுக்கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால், குறுகிய காலமே பணியாற்ற முடிந்தது,” என்று அவர் எழுதியுள்ளார்.
ஆனால், மணிரத்னம் சாரிடம் இருந்து அவள் பெற்ற அறிவு மற்றும் கற்றுக்கொண்ட விஷயங்கள் நிச்சயமாக அவளது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். இந்த அனுபவம் உண்மையிலேயே செழுமையானது. அவரது பெரிய மனதிற்கும், வரவுகளில் அவளது பெயரைச் சேர்த்ததற்கும் சார் உங்களுக்கு நன்றி” என்று குஷ்பு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.