சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 நிகழ்ச்சி இந்த வாரம் ‘Celebrating இசை’ என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது. இசைக்கடவுள் இளையராஜாவுக்கு அஞ்சலியாக பங்கேற்பாளர்கள் முழுவதும் அவரது பாடல்களையே பாடினர். இதன் மூலம் நிகழ்ச்சி, இசைஞானியின் படைப்புகளை நினைவுகூரும் ஒரு இசை விழாவாக மாறியது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வெங்கட்பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கங்கை அமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியாளர் சரண், இளையராஜாவின் குரலைப் பிரதிபலிக்கும் விதமாக பாடியபோது, அதை பாராட்டிய யுவன் சங்கர் ராஜா அவருக்கு இளையராஜாவின் உருவம் பதிக்கப்பட்ட டீ-ஷர்ட்டை பரிசளித்தார். இது நிகழ்ச்சியின் மிக நெகிழ்ச்சியான தருணமாக ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கடந்த ஒரு தசாப்தமாக தமிழ் குடும்பங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பல இளம் திறமையாளர்கள் இசைத்துறையில் அடியெடுத்து வைக்கின்றனர். இளையராஜா பாடல்களுடன் கூடிய இந்த வார சிறப்பு எபிசோடுகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. நிகழ்ச்சி வழக்கத்தை விட கூடுதல் உற்சாகத்துடன் நடைபெறுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்த கொண்டாட்ட சுற்று, இசை ரசிகர்களுக்கான விருந்தாக மட்டுமல்லாமல், பங்கேற்பாளர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறப்பு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 நிகழ்ச்சி சனி, ஞாயிறு மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியிலும் ஜியோ ஸ்டார் ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.