சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “கூலி” திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திடீரென ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம். நம் நாடு மற்றும் மக்களின் நற்பெயரை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து கோர சம்பவங்களை நடத்தலாம். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு 26/11 மும்பை தாக்குதல். இந்த சம்பவத்தில் 175 பேர் உயிரிழந்தனர். எனவே, கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய யாராவது நடமாடினால், அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவில், CISF வீரர்கள் சுமார் 100 பேர், மேற்குவங்கத்திலிருந்து கன்னியாகுமரி வரை 7,000 கிமீ தொலைவிற்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டு, கடலோர பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“அவர்கள் உங்கள் பகுதியில் வரும்போது, அவர்களை வரவேற்று, முடிந்தால் அவர்களுடன் சிறிது தூரம் நடந்து சென்று உற்சாகப்படுத்துங்கள். நன்றி” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் வீடியோவை பகிர்ந்து, ரஜினிகாந்தின் சமூக பொறுப்புணர்வை பாராட்டி வருகின்றனர்.
“கூலி” திரைப்படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்த் “ஜெயிலர் 2” படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“கூலி” படத்தில், ரஜினிகாந்துடன் நாகார்ஜூனா, உபேந்திரா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஜெயிலர் 2” படத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த் வேறெந்த இயக்குனருடன் கூட்டணி சேர்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இளம் இயக்குனர்களிடம் அவர் கதைகள் கேட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.