சென்னை: சூர்யா, திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் செம ஹேப்பியாக உள்ளனர்.
தீபாவளிக்கு வெளியாக இருந்த கருப்பு படத்தின் ரிலீஸ் பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் 45வது படமான கருப்பு படம் உருவாகியுள்ளது.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பொங்கலுக்கு படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். படம் வெளியாகததால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து, கருப்பு படம் ஓடிடியில் விற்பனையாகவில்லை என்றும், ஆர்.ஜே.பாலாஜிக்கும், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுக்கு இடையே சண்டை காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக பலவிதமான வதந்திகள் பரவியது.
இதையடுத்து, கடந்த வாரம் ஆர்.ஜே.பாலாஜி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், இந்த படத்திற்காக நீண்ட நாட்களாக அனைவரும் காத்து இருக்கிறார்கள். நானும் இரண்டு வருடமாக காத்திருக்கிறேன். உங்களுடைய காத்திருப்பு நிச்சயமாக நல்ல பலனை தரும். இதற்கு மேல் நிறைய நேரத்தை எடுத்துக்கொள்ள மாட்டேன் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என பேசி இருந்தார்.
அவர் சொன்னபடியே, கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார். படம் மே மாதம் 14ந் தேதி வெளியாகும் என ஆர்ஜே பாலாஜி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.