சென்னை: நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் நிறுவப்பட்டு 15 ஆண்டுகள் கடந்ததை நினைவுகூரும் விழா நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கல்வியால் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இயங்கும் இந்த அமைப்பின் விழாவில் பல முன்னாள் மாணவர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நடந்த ஒரு சிறப்பு தருணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அகரம் மூலம் கல்வி உதவி பெற்று தற்போது பொறியியல் பட்டம் பெற்ற மாணவர் ஒருவர் தனது படிப்பு நாள்களில் உருவாக்கிய எலக்ட்ரிக் பைக் ஒன்றை மேடையில் எடுத்துவந்து நின்றார். அந்த பைக்கை நடிகர் சூர்யா நேரில் ஓட்டி பார்த்தார். அவருடன் அந்த மாணவரும் பைக்கில் அமர்ந்திருந்தார்.

இந்த காட்சியை பார்த்த சூர்யாவின் மகள் தியா பரவசமாக சிரித்ததைப் பார்த்து நிகழ்ச்சியில் இருந்தோர் மகிழ்ந்தனர். அந்த தருணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த மகிழ்ச்சியைக் நடிகர் சிவகுமார் தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்தார்.
அதே நிகழ்ச்சியில், சூர்யாவின் சகோதரரும் நடிகருமான கார்த்தி, சூர்யாவின் குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோர் அகரத்தின் மாதம் 300 ரூபாய் நன்கொடை திட்டத்தில் தங்களது பாக்கெட் பணத்தை நன்கொடையாக வழங்கி வருவதாகக் கூறி பாராட்டினார். மேலும், “பணம் இல்லாமல் தடுமாறும் நிலையில், ஜோதிகா சொன்ன வார்த்தையால்தான் இத்தகைய முயற்சி தொடங்கப்பட்டது. அன்பால் செய்; பணம் பின்வந்து சேரும்,” என அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் முக்கியக் கோட்பாடு, “விதை விதைத்தோம், பயிர் வளர்ந்தது” என்பதைத்தான் நினைவுபடுத்தியது. ஒரு நாள் சைக்கிள் இல்லாமல் கல்விக்காக வந்த மாணவர் இன்று தனது கை திறனால் எலக்ட்ரிக் பைக் உருவாக்கி, அதனை ஓட்டும் சூர்யாவை பார்த்தது உணர்ச்சி மிக்க தருணமாக மாறியது.