திருவனந்தபுரம்: வெளிநாட்டு சொகுசு கார்கள் வாங்கியதில் வரி ஏய்ப்பு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பிரபல மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பூட்டானில் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய லேண்ட் க்ரூஸர், லேண்ட் ரோவர் போன்ற கார்கள் ஏலத்தில் விற்கப்பட்டதை ஒரு கும்பல் குறைந்த விலையில் வாங்கியதாக தெரியவந்துள்ளது. அந்தக் கார்கள் சட்டப்படி வரி செலுத்தாமல் அசாம், பீஹார் எல்லை வழியாக இந்தியாவுக்கு கடத்தப்பட்டு, பின்னர் ஹிமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டன. அங்கிருந்து பல நகரங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்து, மறுபதிவு செய்யப்பட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், “ஆப்பரேஷன் நும்கோர்” என்ற பெயரில் நாடு முழுவதும் சுங்கத்துறை சோதனைகள் நடந்தன. கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். துல்கர் சல்மான் வீட்டில் இருந்து சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
கார் விற்பனையகம் மற்றும் தொழிலதிபர்களின் இடங்களிலும் சோதனை நடந்தது. எத்தனை கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்ற விபரம் வெளியாகவில்லை. அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.