சென்னை: உயர்நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், நான் 300 படங்களில் நடித்துள்ளேன். என்னுடைய காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
எனது நகைச்சுவை காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நடிகர் சிங்கமுத்துவும் நானும் 2000-ம் ஆண்டு முதல் இணைந்து நடித்து வருகிறோம்.
நாங்கள் இணைந்து நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிங்கமுத்து என் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்பட்டு எனக்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தார்.
இருவருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு, அது தொடர்பான வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை யூடியூப் சேனல்களில் சிங்கமுத்து என்னை மிகவும் தரக்குறைவாக பேசினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எனது நல்ல பெயர் கெட்டுவிட்டது.
நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். எனவே, எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்த சிங்கமுத்து, நஷ்டஈடாக ரூ.5 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 2 வாரத்தில் பதிலளிக்குமாறு சிங்கமுத்துவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பிறகு; நடிகர் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். நடிகர் சிங்கமுத்துவின் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.