சென்னை: நான் உடை மாற்றும்போது கேரவனுக்குள் திடீரென டைரக்டர் நுழைந்தார் என்று கசப்பான அனுபவத்தை நடிகை ஷாலினி பாண்டே பகிர்ந்துள்ளார்.
2017ம் ஆண்டு சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பு பலரால் பேசப்பட்டது.
அதை தொடர்ந்து மஹாநதி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் 2019ம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் நடித்த 100 சதவீதம் காதல் படத்தில் நடித்து அறிமுகமானார். அதை தொடர்ந்து பல இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அவர் திரைத்துறையின் தொடக்கத்தில் நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்தார்.
அதில் அவர் “நான் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் நடித்து முடித்துவிட்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்தேன். அப்பொழுது எனக்கு 23 வயதே ஆனது. அப்பொழுது அந்த படத்தின் இயக்குனர் நான் கேரவனில் உடை மாற்றிக் கொண்டு இருக்கும் போது அவர் கதவை தட்டாமலே உள்ளே நுழைந்தார்.
எனக்கு என்ன செய்வது என தெரியாமல் அவரை கண்மூடித்தனமாக திட்டினேன். இந்த திரைத்துறையில் அதன் பிறகுதான் என்னை காப்பாற்றிக் கொள்ள யார் யாருக்கு எந்த இடத்தை தரவேண்டும் என புரிந்தது. அதை நானே கற்றுக் கொண்டேன். நான் நல்ல மனிதர்கள் மற்றும் ஆண்களுடன் பணியாற்றியுள்ளேன். பல மோசமான மனிதர்களுடனும் வேலை செய்துள்ளேன்” என அவரது அனுபவத்தை பகிர்ந்தார்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டப்பா கார்டல் வெப் தொடரில் நடித்து இருந்தார். அடுத்ததாக தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லிக் கடை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.