சென்னை: ‘ரெட்ரோ’ படத்தில் 15 நிமிட சிங்கள் ஷாட் காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறது படக்குழு. இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
‘ரெட்ரோ’ படத்தின் ‘கனிமா’ என்ற பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. இதில் பூஜா ஹெக்டேவின் நடனம் இணையவாசிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலை ஒட்டி 15 நிமிடக் காட்சி ஒன்றை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு.
‘கனிமா’ பாடலைத் தொடர்ந்து சண்டைக் காட்சி, அதனைத் தொடர்ந்து ஒரு காட்சி என 15 நிமிடத்துக்கு ஒரே டேக்கில் எடுத்திருக்கிறார்கள். இக்காட்சிக்காக அனைத்து நடிகர்களும் பங்கெடுத்து ஒத்திகைப் பார்த்து, இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். திங்கட்கிழமை தோறும் படப்பிடிப்பில் நடைபெற்ற சுவாரசியமான சம்பவங்களை வெளியிட்டு வருகிறது படக்குழு.
இதில் இந்த 15 நிமிடக் காட்சி குறித்து வெளியிட்டு இருக்கிறார்கள். இதே போன்று ‘வீர தீர சூரன்’ படத்திலும் 16 நிமிடக் காட்சி ஒன்றை சிங்கிள் டேக்கில் காட்சிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ரோ’. 2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார்.