சென்னை: அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ‘கெத்து’ தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
ஸ்வாசிகா விஜய், ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கிராமத்து கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. கொண்டாடி தீர்த்தனர்.
நடிகர் விஜயகாந்தின் ‘பொன்மனச் செல்வன்’ படத்தில் இளையராஜா இசையமைத்த ‘பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக விஜயகாந்த் ரசிகரான தினேஷுக்காக இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய காட்சிகளை ரசிக்க வைப்பதில் இந்தப் பாடல் பெரும் பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், படத்தின் நடிகர்களான தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், இசையமைப்பில் உருவான பாடலைப் பயன்படுத்தியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர். பாடலின் வெற்றி குறித்தும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
‘லப்பர் பந்து’ படம் இதுவரை ரூ.20 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.