தேசிய திரைப்பட விருதுகள் என்பது இந்திய சினிமா உலகில் மிகப்பெரிய பெருமைகளில் ஒன்று. சமீபத்தில் 71-வது தேசிய விருதில் வெறும் 5 வயதில் சிறந்த குழந்தை நடிகைக்கான விருதை த்ரிஷா தோசர் பெற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. கமல்ஹாசனே கூட தன்னுடைய 6 வயது சாதனையை அவர் முறியடித்துவிட்டார் என பெருமையுடன் பாராட்டினார். ஆனால், கமலின் சாதனையை இதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் நடிகை முறியடித்திருந்தார் என்பது பலருக்கும் தெரியாது.

அந்த நடிகை வேறு யாருமல்ல, பேபி ஷாமிலி! நடிகை ஷாலினியின் தங்கையான ஷாமிலி, 2 வயதில் திரையுலகில் அறிமுகமானார். ‘ராஜநடை’ படத்திலிருந்து தொடங்கி, பல மொழிகளில் நடித்தார். ஆனால், 1990-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய அஞ்சலி திரைப்படமே அவருக்கு வாழ்நாள் பெருமை சேர்த்தது. வெறும் 3 வயதில் நடித்த அந்த கதாபாத்திரத்துக்காகவே ஷாமிலிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பெற்ற மிக இளம் வயது குழந்தை நடிகை என்ற சாதனையை அவர் பெற்றிருந்தார்.
இதோடு, 4 வயதில் வருமான வரி செலுத்திய சிறுமி என்ற அபூர்வ சாதனையும் ஷாமிலி பெற்றிருந்தார். அப்போது ஒரு படத்திற்கு ரூ.2.5 லட்சம் வரை சம்பளம் வாங்கிய ஷாமிலி, 90களில் தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிஸியான குழந்தை நட்சத்திரமாக விளங்கினார். 2000 வரை குழந்தை கதாபாத்திரங்களில் நடித்த அவர், பின்னர் கலைகளில் கவனம் செலுத்தினார்.
2009-ல் ஹீரோயினாக மீண்டும் அறிமுகமானாலும், தொடர்ந்து நடிக்கவில்லை. 2016-ல் வீர சிவாஜி, 2018-ல் அம்மாமகரில்லு போன்ற படங்களில் நடித்தது அவரது கடைசி முயற்சிகள். தற்போது சினிமாவிலிருந்து விலகி, கண்ணாடி ஓவிய கலைஞராக புளோரன்சில் பயிற்சி பெற்று தனது கலை வாழ்க்கையை முன்னெடுத்து வருகிறார்.