சென்னையில் இசைஞானி இளையராஜாவின் இசைப் பயணத்தின் 50ஆம் ஆண்டு கொண்டாட்ட விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில் கமல்ஹாசன் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. அவர், “உயிரே உறவே தமிழே வணக்கம்! இங்கு இருப்பவர்களை எல்லாம் வரவேற்க வேண்டுமென தோன்றுகிறது, ஏனெனில் இளையராஜாவின் இசை நம் மண்ணையே நனைத்துவிட்டது” என்று தொடங்கி பேசினார்.

தன்னுடைய அண்ணனாகக் கருதும் இளையராஜாவுடன் 50 ஆண்டுகள் கடந்து வந்த அனுபவத்தை வெளிப்படுத்திய கமல், “முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பெயர் வைத்த அதே மாமனிதர்தான், எனக்கும், இளையராஜாவுக்கும் பெயர் சூட்டினார்” என பெருமையுடன் குறிப்பிட்டார். மேலும், “இசைஞானிதான் என் அண்ணன்” என்ற வார்த்தைகளால் மேடையே முழுதும் கைதட்டலால் முழங்கியது.
இளையராஜாவின் இயற்பெயர் ஞானதேசிகன். அவரது தந்தை பள்ளியில் சேரும் போது ராஜையா என மாற்றினார். பின்னர் இசை ஆசிரியர் தன்ராஜ் மாஸ்டர் அவரை ராஜா என்று அழைத்தார். திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், “அன்னக்கிளி” படத்திற்காக “இளைய” என்ற முன்னொட்டையைச் சேர்த்து “இளையராஜா” என பெயரிட்டார். ஏனெனில் அப்போது ஏ.எம். ராஜா என்ற பிரபல இசையமைப்பாளர் இருந்ததால் குழப்பம் தவிர்க்கப்பட்டது.
பின்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை “இசைஞானி” என அழைத்தார். அதேபோல் கமல்ஹாசனுக்கு “கலைச்சுடர்” என்ற பெயரும் கருணாநிதி அளித்தார். இந்த இரு பெயர்களின் பின்னணியையும் கமல் தனது உரையில் நினைவூட்டினார். உரையினை முடிக்கும்போது பாடல் பாடிய கமல், இளையராஜாவை மெய்மறக்க செய்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.