சென்னை: 2015ஆம் ஆண்டு வெளியான புலி திரைப்படம், நடிகர் விஜய், ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடித்த படமாகும். இயக்குநர் சிம்புதேவன் இயக்கிய இந்த படத்தை, விஜய்யின் நீண்ட நாள் பி.ஆர்.ஓவாக பணியாற்றிய பி.டி. செல்வகுமார் தயாரித்தார். பத்திரிக்கையாளராக இருந்து திரைப்படத் தயாரிப்பாளராக மாறிய அவர், தனது அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

பி.டி. செல்வகுமார் கூறியதாவது, “புலி படத்தை நான் தயாரிக்க வேண்டும் என்று சொன்னது விஜய்யே. முதலில் நான் பி.ஆர்.ஓ வேலை செய்யப்போகிறேன் என்று நினைத்தேன், ஆனால் அவர் என்னை படத்தை தயாரிக்கச் சொன்னார். படத்தில் வில்லி கதாபாத்திரத்துக்கு ஷோபனாவை நடிக்க வைக்க நினைத்தார்கள். ஆனால் நான் நடிகை ஸ்ரீதேவியை நடிக்க வைக்கலாம் என்று பரிந்துரைத்தேன். அவருடைய தீவிர ரசிகனாக இருந்ததால், மூன்று நாட்கள் மும்பையில் தங்கி பேசி சம்மதம் பெற்றேன்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “சுதீப்பை நடிக்க வைக்கும்போது அவர் முதலில் மறுத்தார். ஆனால் அதிக சம்பளமும், முன்பணம் கொடுத்த பிறகே அவர் ஒப்புக்கொண்டார். ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர்ஸை கொண்டு வந்து, உலகத் தரம் வாய்ந்த கிராபிக்ஸ் வேலைகளும் செய்தோம். இது ஒரு பான் இந்தியா படம் என பெருமையுடன் தயாரித்தோம்” எனவும் தெரிவித்தார்.
ஆனால், படத்தின் ரிலீஸுக்கு முன் வருமான வரி சோதனை நடந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. “அது காரணமாக படம் ரிலீஸ் ஆகாது என்று பலர் நினைத்தார்கள். எனினும் என் தலையை அடமானம் வைத்து படத்தை ரிலீஸ் செய்தேன். அதற்குப் பிறகு விஜய் என்னை சந்திக்கவில்லை. அவரைச் சுற்றியிருந்தவர்கள் என்னைத் தடுக்கிறார்கள். ரசிகர்களிடமிருந்து எதிர்மறை விமர்சனங்கள் வந்தபோதும் நான் தைரியமாக எதிர்கொண்டேன்” என்று செல்வகுமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.