‘தி ராஜா சாப்’ படமும் ‘ஜனநாயகன்’ படத்துடன் போட்டியாக ஜனவரி 9-ம் தேதி வெளியாகும். விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும். இது விஜய்யின் கடைசி படம் என்பதால், அதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. விஜய் இப்போது முழுநேர அரசியல்வாதியாகிவிட்டதால், கே.வி.என் தயாரிக்கும் இந்தப் படத்தை பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில், ‘தி ராஜா சாப்’ படமும் ‘ஜனநாயகன்’ படத்திற்குப் போட்டியாக வெளியிடப்பட உள்ளது. இதை ‘மிராய்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் விஸ்வ பிரசாத் உறுதிப்படுத்தினார். இது பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால், இந்தப் படமும் பிரமாண்டமாக வெளியிடப்படும் என்பது உறுதி.

இந்தப் படத்தின் வெளியீடு விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு தெலுங்கு மற்றும் இந்தியில் கடும் போட்டியை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகளை ‘ஜனநாயகன்’ படம் பெறும் என்றாலும், மற்ற மாநிலங்களில் திரையரங்குகளைப் பெறுவதில் கடும் போட்டி இருக்கும்.
இது வசூலைப் பாதிக்க வாய்ப்புள்ளது. ‘தி ராஜா சாப்’ என்பது பிரபாஸ், சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்த மாருதி இயக்கிய படம். இந்தப் படம் பிரபாஸ் நடித்த முதல் திகில் படம் என்பது குறிப்பிடத்தக்கது.