ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரையுலகில் நடக்கும் பாலியல் சுரண்டலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. மலையாள நடிகைகள் பட வாய்ப்புக்காக பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டமாக பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளியில் வந்து பேசி வருகின்றனர். மலையாள நடிகர் சித்திக், இடவெள பாபு, கொல்லம் எம்எல்ஏ முகேஷ், ஜெயசூர்யா, மணியம் பிள்ளை ராஜு உள்ளிட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர்கள் மோகன்லால், ஜெயசூர்யாவை தொடர்ந்து நடிகர் மம்முட்டியும் இந்த விவகாரத்தில் மவுனம் கலைத்துள்ளார். இதுகுறித்து மம்முட்டி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஹேமா கமிட்டியின் பரிந்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்வுகளை நான் ஆதரிக்கிறேன். சினிமாவில் உள்ள அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து இதை செயல்படுத்த வேண்டிய காலம் இது. தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேர்மையாக விசாரிக்கட்டும்.
நீதிபதி ஹேமா குழு அறிக்கையின் முழு விவரம் நீதிமன்றத்தில் உள்ளது. அதன்படி தண்டனைகளை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். சினிமாவில் அதிகார மையம் கிடையாது. சினிமா என்பது அப்படிப்பட்ட அதிகார மையங்கள் செயல்படக்கூடிய களம் அல்ல.
சட்டச் சிக்கல்கள் இருந்தால், நடைமுறை ஹேமா கமிட்டி பரிந்துரைகளை செயல்படுத்தலாம். சினிமா வாழ வேண்டும். அம்மா சங்கமும் அதன் தலைமையும் இந்த விஷயத்தில் முதலில் கருத்து சொல்ல வேண்டும்.
அதன் பின்னரே உறுப்பினராகிய நான் எனது கருத்தை தெரிவிக்க வேண்டும். அதனாலதான் இவ்வளவு நேரம் பேசாம இருந்தேன். இவ்வாறு மம்முட்டி கூறியுள்ளார். நேற்று முன்தினம் (சனிக்கிழமை) “நான் எங்கும் ஓடிப்போகவில்லை.
மலையாள திரையுலகத்தை அழிக்காதீர்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் நமது திரையுலகம் பாதுகாக்கப்பட வேண்டும். நடிகரும், ‘அம்மா’ அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால் கூறியிருந்தார்.
பின்னர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடிகர் ஜெயசூர்யா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “என் மீது இரண்டு தவறான பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இது என்னையும் எனது குடும்பத்தையும் நிலைகுலையச் செய்துள்ளது. இதை சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். தவறான பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது பாலியல் துன்புறுத்தலைப் போலவே வேதனையானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.