சென்னை : ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் விஜயகாந்திற்கு மூன்று மடங்கு கூடுதல் சம்பளம் கொடுத்து நடிக்க வைத்தேன் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்த தமிழ் சினிமா நடிகர் என்ற அடையாளம் பெற்றிருக்கும் விஜயகாந்த், நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு, கால்ஷீட் கொடுத்து அவர்களை முன்னேற்றத்திற்கு கொண்டு வரும் வேலைகளையும் செய்துள்ளார்.
இன்றைய நடிகர்களில் தமிழ் தவிர வேற்று மொழி படங்களில் நடிக்காத ஒரே நடிகர் விஜயகாந்த் தான். அதேபோல் திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுக்க முக்கிய காரணமாக இருப்பவர் விஜயகாந்த்.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு விஜயகாந்த் பற்றி கூறுகையில், விஜயகாந்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று கூறி அவரின் நண்பர் ராவுத்தரை சந்தித்தேன்.
அதிக சம்பளம் சொன்னால் நான் ஓடிவிடுவேன் என்று நினைத்து, அப்போது விஜயகாந்த் வாங்கும் சம்பளத்தை விட 3 மடங்கு சம்பளம் அதிகமாக கேட்டார்.
அவர் கேட்டதற்கு நானும் உடனே சம்மதம் சொல்லிவிட்டேன். அட்வான்ஸ் எப்போது வேண்டும் என்று நான் கேட்டவுடன் அவர் ஷாக்காகிவிட்டார். அப்போது உருவான படம் தான் கூலிக்காரன். இந்த படத்தை முதலில் ரஜினிகாந்தை வைத்து எடுக்க முடிவு செய்தோம். அதன்பிறகு அவர்தான் விஜயகாந்தை வைத்து எடுங்கள் என்று சொன்னார் என கலைப்புலி தாணு கூறியுள்ளார்.