இந்தியாவில் டிக்கெட் முன்பதிவில் ‘எம்புரான்’ சாதனை படைத்துள்ளது. ‘எம்புரான்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு மார்ச் 21-ம் தேதி இந்தியா முழுவதும் தொடங்கியது. ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கியதால், புக் மை ஷோ தளத்தில் ரசிகர்கள் குவிந்தனர். குறிப்பாக கேரளாவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட அனைத்து திரையரங்குகளும் ஒரு மணி நேரத்திலேயே நிரம்பிவிட்டன. மேலும், புக் மை ஷோ தளத்தில் ஒரு மணி நேரத்தில் 96.14K டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.
இந்தியாவிலேயே புக் மை ஷோ தளத்தில் ஒரு மணி நேரத்தில் அதிக டிக்கட் விற்பனையானது ‘எம்புரான்’ படத்துக்குத்தான். இதற்கு முன் ‘லியோ’ படத்தின் 82K டிக்கெட்டுகள் விற்பனையானதுதான் சாதனையாக இருந்தது. இப்போது அதுவும் உடைந்துவிட்டது. இந்த டிக்கெட் விற்பனையால் ‘எம்புரான்’ படம் முதல் நாளில் அதிக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் மட்டும் முதல் நாளில் ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வசூல் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைக்கும் என கூறப்படுகிறது. இதற்கு முந்தைய சாதனையை ‘லியோ’ படம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆசிர்வத் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘எம்புரான்’. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகம். இதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் மற்றும் பலர் நடித்துள்ளனர்.