பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘மா வந்தே’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. பல்வேறு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் உன்னி முகுந்தன் பிரதமர் மோடியாக நடிக்கவுள்ளார். இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று வெளியிடப்பட்டது. தனது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடியாக நடிப்பது குறித்து உன்னி முகுந்தன் பேசியுள்ளார்.
அதில், “‘மா வந்தே’ படத்தில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர தாமோதரதாஸ் மோடியாக நடிப்பதில் பெருமைப்படுகிறேன். நான் அகமதாபாத்தில் ஒரு குழந்தையாக வளர்ந்தபோது, முதலில் அவரை முதலமைச்சராக அறிந்தேன். பின்னர், ஏப்ரல் 2023 இல் அவரை நேரில் சந்தித்தது என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருணம். இது எனக்கு இன்னொரு கதாபாத்திரம் மட்டுமல்ல. இது ஒரு பெரிய பொறுப்பு. ஒரு எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த ஒருவர் இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தார் என்பதைப் பற்றிப் பேசும் இந்தக் கதைக்கு நான் நியாயம் செய்வேன் என்று நம்புகிறேன்.”

குஜராத்தில் தொடங்கிய மோடியின் பயணம், அவரது அரசியல் வாழ்க்கையைத் தாண்டி, அவர் எவ்வாறு இந்தியாவை வடிவமைத்த நபராக ஆனார் என்பதையும் காண்பிக்கும். மோடிக்கும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடிக்கும் இடையிலான உணர்ச்சிப் பிணைப்பை பிரதிபலிக்கும் வகையில் படத்திற்கு ‘மா வந்தே’ (அம்மா நான் உன்னை வணங்குகிறேன்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுவே படத்தின் மையக் கருப்பொருளாக இருக்கும் என்று குழுவினர் தெரிவித்தனர். இந்த படம் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பான்-இந்திய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு விரைவில் தொடங்கி 2026-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.