அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்ரமூடு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வீரதீர சூரன்’.
ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடித்துள்ள சூரஜ் வெஞ்ரமூடு ஒரு பேட்டியில் 18 நிமிட காட்சி குறித்து பேசியுள்ளார்.
அந்த காட்சியில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா மற்றும் தானும் இடம்பெறுவதாகவும், அது ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன் வாழ்நாளில் இப்படியொரு காட்சியை செய்ததில்லை என்றும், ஒரே டேக்கில் படமாக்கியது மறக்க முடியாத அனுபவம் என்றும் சூரஜ் வெஞ்ரமூடு கூறியுள்ளார்.
18 நிமிட காட்சி சிங்கிள் டேக் என்றால், அதற்கு எவ்வளவு பெரிய மெனக்கெடல் என்று படக்குழுவினரை இணையத்தில் பாராட்டி வருகின்றனர். ‘வீரதீர சூரன்’ படத்தின் தமிழக உரிமையை பைவ் ஸ்டார் செந்தில் வாங்கியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.