சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் கருத்து… தெருவிற்கு 10 குடி நோயாளிகள் இருப்பதாக பாட்டல் ராதா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் உருவாகியுள்ள “பாட்டல் ராதா” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தினகரன் இயக்கத்தில் சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள “பாட்டல் ராதா” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றி மாறன், மிஷ்கின், அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்கள், குடி பழக்கத்தால் ஏற்படும் கேடுகள் குறித்து எடுத்துரைத்தனர். விழாவில் பேசிய அமீர், “இந்த கதையைப்போல குடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றி நான் ஒரு படம் இயக்குவதாக இருந்தேன். அதற்காக கள ஆய்வுகள் செய்தும் வைத்திருந்தேன். பாட்டல் ராதாவை பார்த்தபிறகு இனி அந்த படம் செய்தால் பாட்டல்ராதா பார்த்து எடுத்ததைபோல இருக்கும்.
எனவே அதை எடுக்கப்போவதில்லை. குடி நோயாளிகளைப்பற்றி இவ்வளவு சிறப்பாக இனி யார் படம் எடுத்தாலும் அது பாட்டல் ராதா படத்தை விட சிறப்பாக எடுக்கமுடியாது. இந்தப்படம் தமிழில் மிகச்சிறந்தபடம்” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “பாட்டல் ராதா திரைப்படம் நன்றாக எழுதி மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். இந்தப்படத்தின் முதல் பாதி சிரிக்கவும், இரண்டாம் பாதி சிந்திக்கவும் வைக்கும். கூடவே இந்த சமூகத்திற்கு இப்போதைய காலகட்டத்திற்கு அதுவும் அடிக்சனுக்கு ஆளாகியிருக்கும் இந்த சமூகத்திற்கு மிக அவசியமான படமாக வந்திருக்கிறது. இந்தப்படம் உங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். 25, 30 வருடங்களுக்கு முன்பு ஒரு ஊரில் அல்லது ஒரு தெருவில் 5 வீடுகளில் உள்ள ஆண்கள் குடிப்பார்கள். ஒரு வீட்டில் இருப்பவர் குடி நோயாளியாக இருப்பார். இன்று ஒரு தெருவில் ஒருவீட்டில் இருப்பவர் குடிக்காமல் இருந்தாலே பெரிய விஷயமாக இருக்கிறது. தெருவில் 10 குடி நோயாளிகள் இருக்கிறார்கள்” என்று பேசினார்.
குடிநோயாளிகள், இயக்குனர் வெற்றிமாறன், கருத்து, குடிப்பழக்கம்,