சென்னை: எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான குஷி படம் இன்று ரீ-ரிலீஸாகி ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கமலா தியேட்டர் உள்ளிட்ட திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் ஆனது மட்டுமின்றி, தளபதி ரசிகர்கள் தியேட்டரில் குத்தாட்டம் போட்டுக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு விஜய்யின் புதிய படம் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், சச்சின் ரீ-ரிலீஸுக்குப் பின் குஷி தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிகா, மும்தாஜ், ஷில்பா ஷெட்டி ஆகியோருடன் இணைந்து பாடிய பாடல்கள் ரசிகர்களை இன்னும் கவர்ந்துகொண்டே செல்கின்றன.
ஷில்பா ஷெட்டியுடன் “மேக் மேக் மேக்கோரினா”, ஜோதிகாவின் “மேகம் கருக்குது”, மும்தாஜின் “கட்டிப்புடி கட்டிப்புடிடா” உள்ளிட்ட பாடல்கள் வந்தவுடன் ரசிகர்கள் திரையரங்கின் முன்பாகவே ஆட்டம் போட்டு கொண்டாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன.
25 ஆண்டுகள் கடந்தும், குஷி படம் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்திருப்பது தெளிவாகிறது. இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிரும் வீடியோக்கள் படத்தின் மீதான ரசிகர்களின் கொண்டாட்டத்தை வெளிப்படுத்துகின்றன. தளபதி விஜய் ரசிகர்களுக்கு இந்த ரீ-ரிலீஸ் மறக்க முடியாத திரையரங்க அனுபவமாக மாறியுள்ளது.