தமிழ்த் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு நுழைந்தவர்களின் பட்டியலில் இப்போது விஜயும் இணைந்துள்ளார். முன்னணித் தலைவர்கள் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், சரத்குமார், டி. ராஜேந்தர், சீமான் போன்றவர்களின் பங்களிப்பிற்கு பின்னர், விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற கட்சியை உருவாக்கி ஓராண்டை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில், கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை இன்று விமர்சையாக கொண்டாடி வருகிறார்.
விஜய் கடந்த சில ஆண்டுகளில் தனது அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். கல்வி விருது விழா, கட்சி தொடக்க விழா, முதல் மாநாடு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா என ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் தயக்கமின்றி பங்கேற்று உரையாற்றி வருகிறார். இந்த விழாக்களில் கலந்து கொள்ளும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு அளவான விருந்து வழங்கப்படும் என்றதும் ஒரு அடையாளமாக மாறியுள்ளது.
இந்நிலையில், பாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில் இன்று நடைபெறும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் உணவு மெனு பற்றிய விவாதம் எழுந்துள்ளது. தகவலின்படி, வெஜ் பிரியாணி, சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், கேரட் அல்வா, அடை பிரதமன், ஐஸ்கிரீம் என 21 வகை உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அசைவ உணவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளன என்பதே தற்போது ஒரு முக்கியமான விவாதப்பொருளாக மாறியுள்ளது.
சமூக வலைதளங்களில், “தவெக நிகழ்ச்சிகளில் திட்டமிட்டே அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறதா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வழக்கமாக பிற கட்சிகள் பொதுவிழாக்களில் சைவம் மற்றும் அசைவம் இரண்டையும் வழங்குவது வழக்கம். ஆனால், விஜய் தலைமையில் நடைபெறும் நிகழ்வுகளில் மட்டும் அசைவ உணவுகள் வழங்கப்படாதது சமூக வலைதளங்களில் கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்துள்ளது.
இதற்கு முன்னர், நடிகர் ரஜினிகாந்த் தனது ராகவேந்திரா மண்டபத்தில் மதுரை ரசிகர்களைச் சந்தித்தபோது, “இது சைவ மண்டபம், எனவே அசைவ உணவுப் பரிமாற முடியாது” என கூறிய சம்பவத்தை சிலர் நினைவு கூர்கிறார்கள். விஜயும் அதே போல் தனது மேலிடத்திலிருந்து வந்த உணவு கொள்கையை கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மீது திணிக்கிறாரா என்பதே தற்போதைய சர்ச்சையின் மையமாக உள்ளது.
இந்த விவகாரத்தை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளத்தில் விவாதத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவர் “விஜய் பாஜகவின் உணவு முறையை பின்பற்றுகிறாரா?” என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார். மகா சிவராத்திரி நாளில் நடைபெறும் இந்த விழாவில் அசைவ உணவை தவிர்த்திருப்பது இயல்பாக இருக்கலாம் என்ற கருத்துக்களும் எழுந்துள்ள நிலையில், இது தொடக்கத்திலிருந்தே விஜயின் நிலைப்பாடா? அல்லது இது ஒரு அரசியல் உத்தியா? என்பதற்கு பதில் எதிர்காலத்தில் தெளிவாகும்.