பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியின் பேரன் திருமண விழா சேலத்தில் நடந்தது. இதில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமண நிகழ்வில் நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்டது முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது. சென்னையில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட விமானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்., நடிகர் விஜய் சேதுபதி, லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தமிழ் குமரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
விமானம் சேலம் காமலாபுரம் எயர்போர்டில் தரையிறங்கியதும், பிரபலங்கள் தனித்தனி வாகனங்களில் திருமண நிகழ்விடம் சென்றனர். ஜேசன் சஞ்சய் திருமண விழாவில் மணமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். விழாவில் ஜி.கே.மணி, ஜேசன் சஞ்சய்க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய், தற்போது திரைப்பட இயக்கத்திற்குத் தயாராகி வருகிறார். அவரின் முதல் படம் லைகா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் இந்த தகவலை உற்சாகத்துடன் எதிர்நோக்குகின்றனர்