சென்னை நகரத்தில் சமீபத்தில் நடைபெற்ற ரவி மோகன் ஸ்டூடியோ திறப்பு விழாவில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வில் தொகுப்பாளினி பாவனா, நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிடம் நகைச்சுவையாக பேசியது குறித்து சிலர் தவறாக புரிந்து கொண்டனர். குறிப்பாக யோகி பாபு ரசிகர்கள், “இதே வார்த்தைகளை வேறு நடிகரிடம் பேச முடியுமா?” என்று கேட்டு வீடியோவை பரப்பினர். இதன் காரணமாக பாவனாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாவனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட விளக்கத்தை வெளியிட்டார். “நானும் யோகி பாபுவும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் முன்னும் பல நிகழ்ச்சிகளில் இப்படித்தான் ஜாலியாக பேசியிருக்கிறோம். யாரும் அதை தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது சிலர் வீடியோவை தவறாக புரிந்து பரப்புகிறார்கள். நானும் கேள்விகளை நகைச்சுவை ரீதியாக கேட்டேன், யோகி பாபுவும் அதேபோல் பதிலளித்தார். எங்களுக்கு இடையில் எந்தவித பிரச்னையும் இல்லை” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், “சிலர் தேவையில்லாமல் எங்களுக்கு இடையே ஈகோ பிரச்சினை இருக்கிறது என்று காட்ட முயற்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை. நிகழ்ச்சி முடிந்த பிறகும் நாங்கள் இருவரும் ஜாலியாகவே பேசிக் கொண்டோம். எனவே இந்த விஷயத்தில் தேவையில்லாமல் வம்பு கிளப்ப வேண்டாம்” என்று பாவனா வலியுறுத்தினார். அவர் தனது பதிவில் யோகி பாபுவையும் டேக் செய்திருந்தார்.
தற்போது பாவனாவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் சிலர் அவரின் விளக்கத்தை ஆதரிக்கிறார்கள், மற்றவர்கள் இன்னும் விமர்சனம் செய்து வருகிறார்கள். எந்த வழியிலாயினும், பாவனாவின் பதில் இந்த சர்ச்சைக்கு ஒரு முடிவை கொண்டுவந்ததாக கூறலாம்.