விக்ரம் நடித்த ‘வீர தீர சூரன்’ படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 50 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து விக்ரம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் விக்ரம் கூறியிருப்பதாவது, “எனது ரசிகர்களுக்கு ஒரு தலைசிறந்த படைப்பு, கம்பீரமான, யதார்த்தமான படைப்புகளை கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன்.
அது இயக்குனர் அருண்குமார் மூலம் நடந்தது. படத்தை ரிலீஸுக்கு முன் பார்த்த நண்பர்கள் இந்த ஆண்டின் மிகப்பெரிய படம் என்று பாராட்டினர். ஆனால், ரிலீஸ் நாளில் எதிர்பாராத தாமதம் ஏற்பட்டதால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. முதல் ஷோ வராவிட்டால் படம் ஓடாது என்கிறார்கள். எங்கள் படம் மாலைக்காட்சிக்கு மட்டுமே வந்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மறக்க முடியாதது.

ரசிகர்கள், குடும்பம் குடும்பமாக, ஒவ்வொரு அம்சத்தையும் கொண்டாடி பாராட்டினர். படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கியுள்ளனர். என் ரசிகர்களுக்கு நன்றியைத் தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது. என் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தருவேன். அனைவருக்கும் நன்றி” என்றார்.
அருண்குமார் இயக்கத்தில், ‘வீர தீர சூரன்’ படத்தில் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சுரமுடு, துஷாரா விஜயன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘வீர தீர சூரன் பார்ட் 2’ வெளியான 8 நாட்களில் 52 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.