சென்னை : டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் சந்தானத்திற்கு அம்மாவாக நான் நடிப்பதா என கஸ்தூரி அதிர்ச்சியுடன் கேட்ட சம்பவம் நடந்துள்ளது. பின்னர் கதையை கேட்டு சம்மதித்துள்ளார்.
கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’, 2023-ல் வெளிவந்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உருவாகி உள்ளது.
ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஆப்ரோ இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். .
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் சந்தானம், நடிகை கஸ்தூரி குறித்து பேசி உள்ளார். அதில் அவர், “டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் எனக்கு அம்மாவாக கஸ்தூரியும், அப்பாவாக நிழல்கள் ரவியும் நடித்திருக்கின்றனர். தங்கையாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.
கஸ்தூரி மேடம் கிட்ட இந்த படத்துல எனக்கு அம்மா கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது, என்னது நான் சந்தானத்திற்கு அம்மாவா? என்று ஷாக் ஆயிட்டாங்க. கதையை கேட்டுட்டு முடிவை சொல்லுங்க என்று கதையை சொன்னதும் நடிக்க சம்மதித்தார். கஸ்தூரியின் கதாபாத்திரத்தில் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைய இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.