திருவனந்தபுரம்: தன் மீதான பாலியல் புகார் குறித்து மலையாள நடிகர் நிவின் பாலி விளக்கம் அளித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தன் மீதான பாலியல் புகார் குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நான் ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு தவறான செய்தி வெளியாகி உள்ளதை கண்டேன். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல நான் உறுதியாக இருக்கிறேன், மேலும் இதற்கு பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். உங்கள் அக்கறைக்கு நன்றி. மீதமுள்ளவை சட்டப்படி கையாளப்படும். இவ்வாறு அதில் நடிகர் நிவின் பாலி தெரிவித்துள்ளார்.