சென்னை: எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள ஜெயம் ரவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். இதில் அவர், “சினிமாவைப் பற்றி ஆயிரம் சொல்லுங்கள். நான் நன்றாக நடிக்கவில்லை என்று சொல்லுங்கள், நான் நன்றாக நடித்துள்ளேன் என்று சொல்லுங்கள்.
அந்த விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை என்று சொல்லுங்கள், அதை நான் கேட்கிறேன். சரி, அதை மாற்றி கொள்கிறேன்.
அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக செய்வோம். ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு மட்டுமே தெரியும். என்ன நடக்கிறது என்று எனக்கு மட்டுமே தெரியும். என்னைப் பொறுத்தவரை, எனக்கு ஒரு குறுகிய நட்பு வட்டம் உள்ளது.
அந்த வட்டத்திற்கு அப்பால் என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அது என்னைப் பாதிக்காது. அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனென்றால் என்னைப் பற்றி வெகு சிலருக்கே தெரியும்.
என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு மட்டுமே தெரியும். சினிமா என்று வரும்போது அது ஒரு பொது களம். அதற்காக நீங்கள் என்னை விமர்சிக்கலாம். நான் அதைக் கேட்பேன். சினிமாவையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் இப்படித்தான் பிரித்திருக்கிறேன்.
அதனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மற்றவர்கள் பேசுவது என்னைப் பாதிக்காது. தனிப்பட்ட விஷயங்களை நான் கவனித்துக்கொள்கிறேன். அதைப் பற்றி யாரும் பேசக் கூடாது” என்றார்.