தென்னிந்திய சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் பான் இந்தியா ஹிட் கொடுத்து, ரூபாய் ஆயிரம் கோடி வசூலைத் தாண்டியவை பெரும்பாலும் தெலுங்கு, கன்னட படங்கள்தான். ஆனால் தமிழ் மற்றும் மலையாள சினிமா இதுவரை அந்த மாபெரும் சாதனையை எட்டவில்லை. மலையாள சினிமா அந்த இலக்கை அடைய போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள், முதல் சில நாட்களுக்குப் பிறகு திரையரங்குகளில் காலியாகி போய்விட்டன.

சூர்யாவின் கங்குவா படம், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் ஆயிரம் கோடி வசூல் படமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டும், கதைக்கோண சிக்கல்கள், திரைக்கதை குறைபாடுகள், இசை குறைபாடுகள் காரணமாக தோல்வியடைந்தன. இந்நிலையில், தமிழ் சினிமாவில் முதல் ஆயிரம் கோடி வசூலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் தான் எட்டும் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.
அந்த எதிர்பார்ப்பு தற்போது கூலி படத்தின் மீது இருந்தது. காரணம், ஹிட் கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் இயக்கம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, அனிருத் இசை, மேலும் நாகார்ஜுனா, அமிர் கான், உபேந்திரா, சௌபின் சாஹிர் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இணைந்திருப்பது.
ஆனால், படம் வெளிவந்ததும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று விமர்சனங்கள் குவிந்தன. கதைக்கான நியாயம் இல்லாமை, பல இடங்களில் மந்தமாக இருந்தது என்று பலரும் குற்றம் சாட்டினர். குறிப்பாக லோகேஷ் கனகராஜ் மீது விமர்சனங்கள் அதிகம் எழுந்தன.
அதே நேரத்தில் வசூல் பக்கம் படம் சூப்பராக ஓடிக்கொண்டே இருக்கிறது. வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.151 கோடிகளை வசூலித்துள்ளது. இது தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. முதல் மூன்று நாட்களில் ரூ.300 கோடிகளைத் தாண்டி, நான்கு நாட்களில் ரூ.400 கோடிக்கு அருகில் சென்றுவிட்டது.
பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுவதாவது, அடுத்த 10 நாட்களிலும் தினமும் ரூ.50 கோடிகள் வரை வசூல் செய்தால், கூலி 1000 கோடி வசூலை எட்டுவது சாத்தியம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதை காத்திருந்து தான் அறிய முடியும்.
தமிழ் சினிமாவுக்கு இதுவே முதல் ஆயிரம் கோடி கிளப்பாக மாறுமா அல்லது இது ஒரு சாதாரண ஹிட் படமாகவே தங்கி விடுமா என்பதை ரசிகர்களும் வணிக உலகமும் ஆவலுடன் கவனித்து வருகின்றனர்.