நெய் சோறு, பாக்க ரொம்ப சிம்பிளா இருக்கும். ஆனா அதோட சுவை, அதில் வரும் கமகமக்கும் வாசனைக்கு வேற எந்த சாப்பாடும் ஈடாக முடியாது. பெரும்பாலானவர்களும் இது எப்போதுாவது சாப்பிட்டிருப்பீங்க. ஆனா பக்காவான பாய் வீட்டு ஸ்டைலில் இந்த நெய் சோறை எப்படி பண்ணலாம் என்பதற்கான ஒரு சின்ன டிப்ஸை இப்போ பார்ப்போம்.

முதலில், இரண்டு டம்ளர் பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கணும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கணும். பச்சைமிளகாயை மெதுவாக கீறி வைக்கவும். சின்ன தக்காளி ஒன்றை நறுக்கிக்கொள்ளவும். புதினா மற்றும் கொத்தமல்லி தழைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்டும் இரண்டு ஸ்பூன் அளவு தயாராக இருக்கட்டும். இவை தவிர, இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய், மூன்று ஸ்பூன் நெய், ஒரு கைப்பிடி முந்திரிப் பருப்பு, இரண்டு துண்டு பட்டை, இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு, இரண்டு பிரிஞ்சி இலை, கால் ஸ்பூன் சோம்பு மற்றும் தேவையான அளவு உப்பு வேண்டும்.
இப்போது, ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். அதில் பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் போட்டு தாளிக்கவும். பின்னர் முந்திரிப் பருப்பை சேர்த்து இரண்டு நிமிடம் வறுக்கவும். இதற்கு பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து பச்சை வாசனை போவதுவரை வதக்கவும். அதற்குப் பிறகு நறுக்கிய தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இப்போது, அரிசி அளவிற்கு மூன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான உப்பும் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும், ஊறவைத்த அரிசியை வடித்து சேர்க்கவும். தண்ணீரில் உப்பைச் சுவைத்துப் பார்த்து சரிசெய்த பின், குக்கரை மூடிக் கொண்டு ஒரு விசில் வரும் வரை வைக்கவும். பின்னர் சிம்மில் பத்து நிமிடம் வைத்து, அதைத் திறந்தால் வாசனைக்கே சாப்பிடத் தோன்றும் நெய் சோறு தயார்.
இந்த சோறை ஒரு நல்ல மட்டன் கிரேவி அல்லது சிக்கன் கிரேவியோட சேர்த்து சாப்பிட்டீங்கனா, சொன்ன மாதிரி, பாய் வீட்டு ஸ்டைல் சாப்பாடு கிடைத்துவிடும்.