பிரியாணி என்பது உணவு பிரியர்களின் மனதில் எப்போதும் சிறந்த இடம் பிடித்திருக்கிறது. ஹைதராபாத், ஆம்பூர், தலப்பாகட்டி போன்ற பிரியாணி வகைகள் அனைவருக்கும் பரிச்சயம். ஆனால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு அற்புதமான வகை — கொங்கு நாடு வெள்ளை பிரியாணி — இன்று நம்மில் பலருக்கு தெரியாமலேயே உள்ளது. இந்த வெள்ளை பிரியாணி கோயம்புத்தூர், ஈரோடு போன்ற இடங்களில் மிகவும் பிரபலமாக இருப்பதோடு, அதனுடைய தனித்துவமான சுவையும் மணமும் சிறப்பாக இருக்கும்.

இந்த பிரியாணி பெரும்பாலும் கோழி, ஆட்டிறைச்சி அல்லது சோயாவுடன் சமைக்கப்படுகிறது. முக்கியமாக இதன் நிறம் வெள்ளையாக இருப்பதால்தான் “வெள்ளை பிரியாணி” என்ற பெயர் வந்துள்ளது. சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவை சேர்த்து மசாலா தயாரிக்க வேண்டும். இறைச்சி அல்லது சோயாவை வேகவைத்து, அதனுடன் தயிர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய், நெய் சேர்த்து வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி, புதினா, கொத்தமல்லி, உப்பு மற்றும் தயார் செய்த மசாலாவையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வாசனை நீங்கியதும் தேவையான தண்ணீர், எலுமிச்சைச்சாறு சேர்க்க வேண்டும். பிறகு ஊற வைத்த சீரக சம்பா அரிசியையும் போட்டு தம் போட வேண்டும். தண்ணீர் மற்றும் அரிசி சமமாக இருக்கும் போது மிதமான தீயில் 20 நிமிடங்கள் தம் போடினால் சுவையான வெள்ளை பிரியாணி தயார்.
இது ஒரு பாரம்பரிய கொங்கு நாட்டு சிறப்பாக இருந்தாலும், தற்போது அதை வீட்டிலேயே சமைத்துப் பார்க்கும் சுவை மிகச் சிறப்பு. பிரியாணி சாப்பிட விரும்பும் அனைவரும், கொங்கு நாடு வெள்ளை பிரியாணியை ஒருமுறை சமைத்து ருசி பார்த்தால், அதனுடைய மணமும் சுவையும் மறக்க முடியாததாக இருக்கும்.