பிரியாணி என்று சொல்லும்போது பலவகை சுவைகள் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் அந்த பரந்த பட்டியலில், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணிக்கு ஒரு தனி இடம் உள்ளது. ஆம்பூர், வாணியம்பாடி, ஹைதராபாத் போன்ற பிரியாணிகளும் பிரபலம்தான். ஆனாலும், சீரகச் சம்பா அரிசியில் தயாரிக்கப்படும் திண்டுக்கல் பிரியாணியின் நெசம் சுவையை மிஞ்ச முடியாது. அதே சுவையை பாஸ்மதி அரிசியில் அனுபவிக்க விரும்புகிறீர்களா? இதோ, அந்த ருசியான செய்முறை உங்கள் வீட்டுக்கே.

முதலில் தேவையான பொருட்களை தயார் செய்ய வேண்டும். சிக்கன் 2 கிலோ, பாஸ்மதி அரிசி 2 கிலோ, பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்ற சுவைமிக்க மசாலா பொருட்கள், வெங்காயம், புதினா, இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, தயிர், எலுமிச்சைச்சாறு மற்றும் முந்திரி ஆகியவற்றை முன்னதாக எடுத்துவைக்க வேண்டும். முந்திரியை வதக்கி, தனியாக வைத்துக்கொள்ளலாம். ஆரம்பத்தில், ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து ஒரு நறுமண பவுடராக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பிரியாணி பாத்திரத்தில் எண்ணெயும் நெய்யும் சேர்த்து வெங்காயம், புதினா, மிளகாய்தூள் போட்டு நன்கு வதக்க வேண்டும். அதில் இஞ்சி-பூண்டு விழுதும், அரைத்த சின்ன வெங்காய விழுதும், தக்காளியும், பச்சை மிளகாயும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் தயிர், மசாலா பவுடர், உப்பு, எலுமிச்சைச்சாறு, முந்திரி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கிளறி, சிக்கனை சேர்த்து 50% வெந்துவரைக்கும் வதக்க வேண்டும்.
சிக்கன் பாதியளவு வெந்த பிறகு, தேவையான தண்ணீர் ஊற்றி மூடி வைத்து கொதிக்க விட வேண்டும். பிறகு பாஸ்மதி அரிசியை சேர்த்து மெதுவாக கிளறி, அரிசி 25% வெந்ததும், தம் போட்டு நன்கு வெந்தவுடன் இறக்கலாம். இந்த பாஸ்மதி அரிசி பிரியாணி, சீரக சம்பாவில் தயாரித்தது போல் உணர்வை தரும். உங்கள் வார இறுதி சிறப்பாக அமைய, திண்டுக்கல் ஸ்டைல் பாஸ்மதி சிக்கன் பிரியாணி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.