பல்வேறு விதமான பேக்கிங் ரெசிபிகளில் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை இரண்டிற்குமான வித்தியாசத்தை கண்டுபிடிப்பது பலருக்கு சற்று கடினமான காரியமாக உள்ளது. மேலும் ஒரு சிலர் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகிய இரண்டும் ஒன்றுதான் என்று தவறாக எண்ணுகின்றனர். பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகிய இரண்டுமே பேக்கிங் செய்யப்படும் பொருட்களில் வாயு குமிழ்களை உருவாக்குவதற்கு உதவக்கூடிய பொருட்கள்.
இவை இரண்டின் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பெயர் மற்றும் தோற்றம் காரணமாக அனுபவமிக்க சமையல் வல்லுனர்கள் கூட ஒரு சில சமயங்களில் எது பேக்கிங் சோடா, எது பேக்கிங் பவுடர் என்பதில் குழம்பி போவதுண்டு. பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான நிறம் மற்றும் சுவையைக் கொண்டிருந்தாலும் அவற்றின் வேதியியல் அமைப்பும் பயன்பாடும் வெவ்வேறாக அமைகிறது.
சோடியம் பை-கார்பனேட் பேக்கிங் சோடாவை உருவாக்குகிறது. சோடியம் பை-கார்பனேட் என்ற கார உப்பு அமிலங்களுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுகிறது. இதனால் பேக்கிங் சோடா பயன்படுத்தப்பட்ட மாவு கார்பன் டை ஆக்சைடு வெளியீடு காரணமாக உப்பி எழுகிறது. மோர் அல்லது கோகோ பவுடர் போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் ரெசிபிகளில் பெரும்பாலும் பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது.
பேக்கிங் சோடாவை ஒரு கலவையில் சேர்க்கும் பொழுது அதில் உள்ள அமிலத்துடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு உருவாக்குகிறது. இறுதியாக நமக்கு கிடைக்கும் ப்ராடக்ட் மென்மையாகவும், புசுபுசுவென்றும் கிடைக்கிறது. சூடான ஓவனில் வைத்து பேக் செய்யும் பொழுது மாவு விரிவடைவதால் இந்த விளைவு ஏற்படுகிறது. பேக் செய்யப்பட்ட உணவுகளில் பழுப்பு நிறத்தை கொண்டு வருவதற்கு பேக்கிங் சோடா உதவுகிறது.
இதனால் பிஸ்கட் போன்ற பேக் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிப்பதற்கு பெரும்பாலானவர்கள் பேக்கிங் சோடாவை பயன்படுத்துவர். சோடியம் பை கார்பனேட் மக்காசோள மாவு மற்றும் அமிலம் வழக்கமாக டார்டர் கிரீம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு பேக்கிங் பவுடர் தயாரிக்கப்படுகிறது. இது கார்பன் டை ஆக்சைடு உருவாக்குவதற்கு இதற்கு வெப்பம் மற்றும் ஈரப்பதம் தேவை.
அமிலம் ஏற்கனவே பேக்கிங் பவுடரில் உள்ளது. எந்த ஒரு அமில பொருளும் பயன்படுத்தப்படாத உணவு பொருளில் பேக்கிங் பவுடர் சேர்க்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள் வழக்கமாக பேக்கிங் பவுடர் இரட்டிப்பு செயல்பாடு கொண்டதாக வரையறுக்கின்றனர். அதாவது இது நீருடன் தொடர்பு கொள்ளும் பொழுது அது ஆக்டிவேட் ஆகிறது அல்லது கார்பன்-டை-ஆக்சைடு உற்பத்தி செய்ய துவங்குகிறது. இந்தக் கலவையை சமைக்கவோ அல்லது வெப்பப்படுத்தவோ துவங்கும் பொழுது அது மீண்டும் ஒருமுறை ஆக்டிவேட் ஆகிறது.