
மீன் வறுவல் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவின் முக்கிய இடத்தை மீன் வகிக்கிறது. அதிலும் விரால் மீன் வறுவலின் சுவை தனித்தன்மை கொண்டது.
முதலில் விரால் மீனை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து அலசினால் துர்நாற்றம் நீங்கும். வறுக்க ஏற்ற வட்டங்களாக நறுக்கி மீண்டும் தண்ணீரில் கழுவி வைக்கவும்.

இப்போது மசாலா தயாரிக்க வேண்டும். மிளகாய் தூள், மிளகு, சீரகம், உப்பு, பூண்டு, நன்றாக பழுத்த தக்காளி ஆகியவற்றை ஒன்றாக அரைக்க வேண்டும். தக்காளி சேர்ப்பதால் எலுமிச்சை சாறின் புளிப்பு தேவையில்லை, மேலும் சுவையும் அதிகரிக்கும்.
இந்த மசாலாவை மீனில் நன்றாக தடவி குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஊற விடுங்கள். நிறம் அழகாக சிவப்பாக இருக்க வேண்டுமென்றால் சிறிதளவு காஷ்மீர் மிளகாய்த் தூள் சேர்க்கலாம்.
பின் கடாயில் நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெயை சூடாக்கி, ஊறவைத்த மீனை மிதமான தீயில் வறுக்கவும். மீன் மொறு மொறுப்பாக, கார சுவையுடன் வெந்து வந்ததும் எடுத்துக்கொள்ளலாம்.
விரால் மீன் வறுவலை ரசம் சாதம், சாம்பார் சாதம் அல்லது சாதாரண சாதத்துடன் சாப்பிட்டால் அசத்தலான சுவையை தரும். வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் மீன் வறுவலை எளிதாக செய்து ருசிக்கலாம்.