சமைக்கும் போது நாம் பல முறை அதிக உப்பு சேர்த்துவிடுகிறோம். அதிக உப்பால் சுவையாக இருந்த உணவு திடீரென்று சாப்பிட முடியாததாக மாறிவிடும். அப்படிப்பட்ட சமயங்களில் சோர்வடையாமல், வீட்டிலேயே உள்ள சில பொருட்களைக் கொண்டு உப்பை சமன் செய்யலாம். இதனால் உணவின் சுவையும் காப்பாற்றப்பட்டு, வீணாகிப் போகாமல் தடுக்கும்.

உப்பை குறைக்க எலுமிச்சை சாறு ஒரு சிறந்த உதவி. அதின் புளிப்பு சுவை உப்பை சமன் செய்கிறது. அதேபோல், நெய் அல்லது வெண்ணெய் சேர்ப்பதாலும் உப்பின் தாக்கம் குறையும். மேலும், உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி குழம்பில் போட்டு சமைத்து எடுத்து விட்டால் கூடுதல் உப்பு உறிஞ்சிக் கொள்ளும். மாவு கட்டிகள் போடுவதும் அதே மாதிரி பலனைத் தரும்.
தயிர் அல்லது கிரீம் சேர்ப்பதனால் குழம்பு கெட்டியாகி, உப்பும் குறையும். முந்திரி விழுதும் அதேபோல் உப்பை சமன் செய்து நல்ல சுவையைக் கொடுக்கும். சில உணவுகளில் சிறிதளவு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்தாலும் உப்பை சமன் செய்ய முடியும். இது குழம்பிற்கு ஒரு புதிய சுவையையும் அளிக்கும்.
கடைசியாக, அதிக உப்பைக் குறைக்க தண்ணீர் அல்லது தக்காளி, வெங்காய விழுதைச் சேர்த்து கொதிக்க விடலாம். இப்படி எளிய முறைகளைப் பயன்படுத்தினால், உப்புக் குறைவாக இல்லாமல் சமைக்கப்பட்டாலும், சுவையை மீட்டுக் கொள்ள முடியும். இனி சமைக்கும் போது உப்பு அதிகமாயிருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.