பண்டிகைகளோ, விசேஷங்களோ வந்தால் வீட்டில் இனிப்பு செய்வது ஒரு வழக்கம். அந்த வகையில், மாம்பழ சீசனில் தயாரிக்க ஏற்ற, சுவையும் சத்தும் மிக்கது தான் மாம்பழ அல்வா. வீட்டிலேயே இந்த ஸ்வீட்டை எளிமையாக செய்து, அனைவரையும் மகிழ்விக்கலாம்.
முதலில் தேவையான பொருட்களை தயார் செய்து வைக்க வேண்டும். இரண்டு நன்கு பழுத்த மாம்பழங்களில் இருந்து கூழ் எடுக்க வேண்டும். ஒன்றரை கப் சர்க்கரை, அரை கப் தண்ணீர், இரண்டு ஸ்பூன் கார்ன் ஃப்ளார், சிறிதளவு குங்குமப்பூ, சுத்தமான பசு நெய், சுவைக்கு பிஸ்தா பருப்பு மற்றும் சில்லி பிளக்ஸ் ஆகியவை தேவைப்படும்.

முதலில் ஒரு கனமான பாத்திரத்தில் நெய்யை சேர்த்து சூடாக்க வேண்டும். அதன் பிறகு மாம்பழக் கூழை சேர்த்து சிம்மில் வதக்கத் தொடங்க வேண்டும். பத்து நிமிடங்கள் நன்றாக கிளறி வதக்கினால் வாசனை ஊதும். இப்போது சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறி, அது கரைந்து நிறம் மாறும் வரை சிம்லே வைத்தே கிளற வேண்டும்.
தண்ணீரில் கரைத்து வைத்திருந்த கார்ன் ஃப்ளாரை நன்கு கலந்து, மெதுவாக ஊற்ற வேண்டும். பின்னர் அரை மணி நேரத்திற்கு முன்னே ஊறவைத்து வைத்திருந்த குங்குமப்பூ சாரையும் சேர்க்க வேண்டும். இரண்டு ஸ்பூன் நெய்யையும் மேலாகச் சேர்த்து, திரட்டும் வரை கிளற வேண்டும்.
இப்போது நறுக்கிய பிஸ்தா பருப்பு மற்றும் சில்லி பிளக்ஸை சேர்த்து கலந்து, நன்றாக கட்டி வரும்வரை கிளறினால், மாம்பழ அல்வா தயார். சூடாக இருந்தபோதே பரிமாறினாலும் நல்லது, பின்பு தட்டில் பரப்பி கட்டி குளிர விட்டு துண்டுகளாக வெட்டியும் பரிமாறலாம்.
மாம்பழம் கிடைக்கும் சீசனில் ஒரு முறை இந்த அல்வாவை செய்து பாருங்கள். மெல்லிய சுவை, நெய் வாசனை, மாம்பழத்தின் இனிமை — எல்லாம் கலந்து கிடைக்கும் இந்த இனிப்பு அனைவருக்கும் பிடிக்கும்.