வார இறுதி நாட்களில் பலர் இறைச்சி வாங்கி சமைப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் இறைச்சியைத் தேர்வு செய்யும்போது சில முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும். இறைச்சியின் தரம், நிறம், வாசனை, அமைப்பு போன்றவற்றை பார்த்தாலே அது ஆரோக்கியமானதா என்பதை எளிதில் கண்டறியலாம்.

இறைச்சி பிரகாசமான இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். ஊதா, பழுப்பு அல்லது சாம்பல் நிறம் தரம் குறைந்ததைக் காட்டும். கோழி இறைச்சி இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும்போது மட்டுமே நம்பிக்கையுடன் வாங்கலாம்.
இறைச்சியைத் தொடும்போது அது மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும். விரலால் அழுத்தும்போது தசைநார் மீண்டும் பழைய நிலைக்கு வந்தால் அது தரமானது. துர்நாற்றம் வீசக் கூடாது.
புதிய இறைச்சியில் சிறிய ஈரப்பதம் இருக்கும். அதிக நீர்த்தன்மை அல்லது வறட்சி இருந்தால், அது பழைய இறைச்சி என்பதற்கான அறிகுறி. முகர்ந்து பார்த்து வாங்குவதும் அவசியம்.
கொழுப்பு குறைந்த இறைச்சியைத் தேர்வு செய்ய, இளஞ்சிவப்பு நிறம் மற்றும் மெல்லிய கொழுப்பு படலம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். கொழுப்பு தனித்தனியாக அதிகமாகத் தெரிந்தால் அது ஆரோக்கியமல்ல.
எலும்பில்லா இறைச்சி சமைக்கும் நேரத்தை குறைக்கும், ஆனால் எலும்புடன் கூடிய இறைச்சி அதிக ஈரப்பதத்தையும் சுவையையும் தரும். எனவே விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்யலாம்.
இறைச்சி பசைபோல் பிசுபிசுப்பாக இருந்தாலோ அல்லது பச்சை கலந்த பழுப்பு, சாம்பல் நிறத்தில் இருந்தாலோ அது பாக்டீரியா கொண்டதாக கருதப்படுகிறது. துர்நாற்றம் வீசினால் வாங்காமல் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான இறைச்சியை சரியாக தேர்வு செய்தால் சுவையாகவும் பாதுகாப்பாகவும் சமைத்து சாப்பிடலாம். இந்த வார இறுதியில் இறைச்சி வாங்கும்போது இந்த குறிப்புகளை மறக்காமல் நினைவில் கொள்ளுங்கள்.