புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான இந்து குடும்பங்கள் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ணுகின்றனர். அப்போது சுவையில் எந்த குறையும் வராமல், அசைவ உணவின் சுவையைப் போல சைவ வகைகளை சமைத்து சுவைப்பது பலரின் வழக்கம். அதில் சிறப்பாக பேசப்படும் ஒன்று சைவ ஈரல் கிரேவி. பாசிப்பருப்பை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இந்த கிரேவி சுவையிலும் மணத்திலும் அனைவரையும் கவரக்கூடியது.

இந்த சைவ ஈரல் கிரேவிக்காக பாசிப்பருப்பை நன்கு ஊற வைத்து, பச்சைமிளகாய், சீரகம், மிளகு, உப்புடன் அரைத்து இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, அன்னாச்சி பூ, கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை வதக்க வேண்டும். பிறகு தக்காளி, அவித்து வைத்த பாசிப்பருப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும்.
அனைத்து சுவைகளும் கலந்து வந்தவுடன், மேலாக மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவை கமழும் சைவ ஈரல் கிரேவி தயார் ஆகிவிடும். இதை சப்பாத்தி, சாதம் அல்லது இடியாப்பம் ஆகியவற்றுடன் சாப்பிட்டால் அசைவ சுவை போலவே இருக்கும்.
புரட்டாசி மாதத்தில் சைவ உணவுகளை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைக்க விரும்புவோருக்கு இந்த சைவ ஈரல் கிரேவி சிறந்த தேர்வாகும். சுவையிலும் சத்திலும் அசத்தும் இந்த உணவு, சைவ சாப்பாட்டின் அனுபவத்தை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறது.
#