கன்னியாகுமரி: தற்போது தபால் நிலையங்கள் தபால்துறையின் பழம்பெரும் சேவைகளைத் தவிர புதிய பணிகளிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, ஆதார் கார்டு பதிவு, கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி புதுப்பித்தல், பெயர், முகவரி மற்றும் செல்போன் எண் திருத்தம் உள்ளிட்ட சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இது ஒருவருக்கே உரிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டு விவரங்களை புதுப்பிக்க மிக முக்கியமான வாய்ப்பாக திகழ்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் 1.75 லட்சம் பேர் தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகளை பெற்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் அஞ்சல் துறையின் கீழ் தபால் நிலையங்கள் இன்று தபால் வங்கி, சேமிப்பு கணக்கு மற்றும் பார்சல் சேவைகளுடன் பல்வேறு மைய சேவைகளை வழங்குகின்றன. இதில் முக்கியமாக ஆதார் மற்றும் பாஸ்போர்ட் சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள முக்கிய தபால் நிலையங்களில் ஆட்கள் வரிசையாக சேவையைப் பெற டோக்கன் வழங்கப்படும் நடைமுறை உள்ளது. ஒவ்வொரு நாளும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான திருத்தங்கள் மட்டுமே செய்ய அனுமதிக்கப்படுகிறது. மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் மட்டும் நீண்ட நேரம் வேலை நேரம் நீட்டிக்கபட்டு ஆதார் சேவைகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக நாகர்கோவில் மற்றும் தக்கலை தபால் நிலையங்களில் இந்த சேவைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகின்றன.
கன்னியாகுமரி தபால் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், மாணவர்கள் கல்லூரி சேர்க்கைக்காக தேவையான ஆதார் புதுப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்ப்பது தற்போது முக்கியமாக இருக்கிறது. மாணவர்களின் கைரேகை மற்றும் கண் கருவிழி தகவல்களை அவசரமாக புதுப்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது உயர் கல்வியில் சேர்க்கைக்கு தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்கும்.
தபால் நிலையங்களில் அதிகரித்து வரும் ஆதார் சேவைகளுக்காக, அனைத்து முக்கிய தபால் நிலையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன. கோட்டார், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, நெய்யூர், அழகப்பபுரம், மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் இந்த சேவைகள் நடைபெறுகின்றன.
மேலும், மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும், கன்னியாகுமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலம் 1,79,336 பேர் ஆதார் சேவைகளைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் சேவைகள் மூலம் 18,484 பேர் பயன் பெற்றுள்ளனர். தபால் ஏற்றுமதி மையத்தின் சேவைகளை 12 சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் பயன்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது போன்ற தபால்துறையின் வளர்ச்சி மற்றும் சேவை விரிவாக்கம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மிகப் பெரிய ஆதரவாக இருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.