புதுடில்லி: இந்தியாவின் பிரபலமான ஐ.எஸ்.எல். (ISL) கால்பந்து தொடர், 2025-26 ஆண்டுக்கான பருவத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் செய்தி அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கால்பந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர், ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை நடத்தப்படும். கிரிக்கெட்டில் ஐபிஎல் போன்றதொரு மாபெரும் விளையாட்டு விழாவாக இந்த தொடர் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தொடரின் எதிர்காலம் சிந்திக்க வைக்கும் நிலையில் உள்ளது.
2025-26 பருவத்திற்கான ஐ.எஸ்.எல் தொடர் நடத்தப்படாததற்கான முக்கிய காரணம், விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு இடையேயான மாஸ்டர் ரைட்ஸ் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முடக்கம் ஆகும்.
2010ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், வரும் டிசம்பர் 15ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. ஆனால், அதனை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் நடைபெறாமல் இருந்ததால், புதிய பருவ தொடர் குறித்து எந்த உறுதியும் இல்லை.
இதனால், 2025-26 பருவத் தொடர் வணிக ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் நடத்த இயலாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனம், அனைத்து கிளப்களுக்கும் அதிகாரபூர்வ கடிதமாக அனுப்பியுள்ளது.
இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடரின் எதிர்காலம் தொடர்பாக விரைவில் தெளிவான நிலைமை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.