பார்படாஸ்: இந்த 5 வீரர்களின் உறுதுணையே வெற்றிக்கு காரணம்… டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 5 வீரர்கள் உறுதுணையாக இருந்தனர்.
டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் இன்று நடந்தது. இதில், இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. இப்போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 5 வீரர்கள் உறுதுணையாக இருந்தனர். அவர்களின் ஆட்டம், இந்தியா வெற்றி பெற திருப்பு முனையாக அமைந்திருந்தது. போட்டியை முடிவு செய்யும் பந்து வீச்சை ஜஸ்பிரித் பும்ரா வெளிப்படுத்தினார். தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 30 பந்துகளில் 30 ரன்களை எடுக்க வேண்டி இருந்தது. அப்போது மீண்டும் பும்ரா மீது நம்பிக்கை வைத்து ரோகித் பந்து வீசும் வாய்ப்பை வழங்கினார்.
இதில், 16-வது ஓவரில் 4 ரன்களே பும்ரா விட்டு கொடுத்து சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அடுத்து, 18-வது ஓவரில் 2 ரன்களை கொடுத்ததுடன், ஜேன்சன் விக்கெட்டையும் கைப்பற்றினார். பும்ரா மொத்தம் 4 ஓவர்களை வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா வெற்றி பெற பெரிதும் உதவினார்.
இறுதி ஓவர் வீசப்பட்டபோது, சூர்ய குமார் யாதவ் பிடித்த கேட்ச் இந்தியாவின் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது. 6 பந்துகளில் 16 ரன்களை தென்ஆப்பிரிக்க அணி எடுக்க வேண்டியிருந்தது. அப்போது, அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லரை, சிறந்த முறையில் பீல்டிங் செய்த சூர்ய குமார் யாதவ் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார்.
விராட் கோலியுடன் சேர்ந்து முக்கிய பார்ட்னர்ஷிப்பாக அக்சர் பட்டேல் விளையாடியது இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது. 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 72 ரன்களை சேர்த்தனர். ரன்-அவுட் ஆவதற்கு முன் வரை 31 பந்துகளில் (1 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள்) 47 ரன்களை எடுத்ததுடன், பந்து வீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி, ஸ்டப்சின் விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தியா 34 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, அக்சர் மற்றும் துபேவுடன் சேர்ந்து விராட் கோலி, 170 ரன்களுக்கு கூடுதலான ரன்களை இந்தியா எடுக்க உதவினார். அவர் 59 பந்துகளில் (6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள்) 76 ரன்களை விளாசினார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் பட்டேல் (1/49) மற்றும் குல்தீப் யாதவ் (0/45) அதிக ரன்களை விட்டு கொடுக்கும் வகையில் பந்து வீச்சை வெளிப்படுத்தி இருந்த நிலையில், வேகப்பந்து வீச்சாளரான ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக பந்து வீசி முதலில் கிளாசனையும், பின்னர் டேவிட் மில்லர் மற்றும் ரபடா ஆகியோரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 3 ஓவர் வீசி 20 ரன்கள் கொடுத்து மொத்தம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.