இந்தாண்டு மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்கிய 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது, சுமார் ஒரு மாதத்தை நெருங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பத்து அணிகள் பங்கேற்று விளையாடும் இத்தொடரில், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி குறித்து எதிர்பார்ப்பும் விவாதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த 32வது லீக் ஆட்டம் ரசிகர்களை பரபரப்பாக வைத்தது. டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில், டெல்லி அணி முதலில் களமிறங்கி 188 ரன்கள் குவித்தது. அதற்குப் பதிலாக விளையாடிய ராஜஸ்தான் அணியும் அதே 188 ரன்கள் எடுத்து போட்டியை டை நிலையில் முடித்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 பந்துகளில் 2 விக்கெட்டுகளை இழந்து 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ், 4 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது.
இந்த வெற்றி, டெல்லி அணிக்குப் பெரும் சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை சூப்பர் ஓவரில் விளையாடி வெற்றி பெற்ற அணியாக பஞ்சாப் கிங்ஸ் இருந்து வந்தது. அவர்கள் நான்கு சூப்பர் ஓவர் ஆட்டங்களில் மூன்றில் வென்றிருந்தனர். ஆனால், தற்போது டெல்லி அணி ஐந்தாவது சூப்பர் ஓவர் போட்டியில் நான்காவது வெற்றியை பதிவு செய்து, அந்த சாதனையை முறியடித்துள்ளது.
இந்த வெற்றியுடன், டெல்லி கேபிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவர் வெற்றிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.