இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மா தனது ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக துவக்க வீரராக விளையாடி, அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். குறிப்பாக, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டின் பாணியில் அதிரடியாக விளையாடும் அவரது திறமை, இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பாக அமைந்தது. தனது முதல் சர்வதேச போட்டியில் டக் அவுட் ஆனாலும், அடுத்த போட்டியிலேயே அபார சதத்தை விளாசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தென்னாபிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக கணிசமான ரன்கள் குவித்த அவர், சமீபத்திய இங்கிலாந்து தொடரில் தனக்கே உரிய அடையாளத்தை நிரூபித்தார்.
மும்பையில் நடைபெற்ற கடைசி போட்டியில், இங்கிலாந்து அணியை எதிர்த்து 135 ரன்கள் (54 பந்துகள்) அடித்து அசத்திய அவர், இந்திய வீரர்கள் மத்தியில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த சாதனை பெற்றார். மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரசித் போன்ற உலகத் தரமான பவுலர்களை வசமாக சமாளித்து, 13 சிக்ஸர்களை விளாசினார்.
இந்த வெற்றிக்குப் பின், பிப்ரவரி 24ஆம் தேதி துபாயில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நேரில் சென்று பார்வையிட்டு இந்திய அணிக்கு ஆதரவளித்தார். போட்டியின் முடிவில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரமை சந்திக்கும் சந்தர்ப்பம் அவருக்கு கிடைத்தது.
வாசிம் அக்ரம் அவரை பாராட்டியபோது, மும்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அபிஷேக் சர்மா விளாசிய அதிரடி இன்னிங்ஸை பார்த்ததாக குறிப்பிட்டு, “நீங்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். இது வெறும் ஆரம்பம் மட்டுமே, நீங்கள் இதை தொடர்ந்து, தொடர்ந்து நிலைக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “இந்த தருணம் உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் முதல் கட்டம் மட்டுமே. இனி நீண்ட காலம் இதே போல் பயணிக்க வேண்டும். உங்கள் திறமையை மேலும் மேம்படுத்தி, தொடர்ந்து உழைத்து, அடுத்த 30 வருடங்கள் தரமான கிரிக்கெட் விளையாடுங்கள்” என்று ஆலோசனை வழங்கினார்.
அபிஷேக் சர்மா பணிவுடன் அவரது அறிவுரைகளை ஏற்று கொண்டார். வாசிம் அக்ரம் அவருக்கு நேரடியாக வாழ்த்துகளை தெரிவித்துக் கை கொடுத்தார். இந்நிலையில், இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் செமி ஃபைனலுக்கு முன்னேறி, அடுத்த வெற்றிக்குத் தயாராகி வருகிறது.