சென்னை : சாய் சுதர்சன், நீங்கள் விளையாடும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. அதை அப்படியே தொடருங்கள். இந்திய ஜெர்சியில் உங்களை காண காத்திருக்கிறேன்’ என்று நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸுடன் ‘மதராஸி’ படத்திலும், சுதா கொங்கராவுடன் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில், ‘மதராஸி’ வருகிற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சனின் ஆட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘சாய் சுதர்சன், நீங்கள் விளையாடும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது. அதை அப்படியே தொடருங்கள். இந்திய ஜெர்சியில் உங்களை காண காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.
சாய் சுதர்சன் ஏற்கனவே இந்திய அணிக்காக 1 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.